மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அவலமும் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை எலிகள் கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரட்லாம் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் பாட்டி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள ரட்லாம் அரசு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கடுமையான பாதிப்புகளால் கோமா நிலைக்குச் சென்ற சூரஜுக்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினமும் அவரைப் பார்க்க அவரது குடும்பத்தினர் வந்துபோவது வழக்கமாக இருந்துள்ளது.
அப்படி நேற்று சூரஜைப் பார்க்க அவரது தந்தை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது சூரஜின் காலில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. மேலும் சூரஜை படுக்க வைத்திருந்த மெத்தையிலும் ரத்தக்கறை இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். உடனே அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களை அழைத்துக் கேட்டுள்ளார்.
அங்கு வந்து பார்வையிட்ட ஊழியர்கள் எந்த ஒரு பதட்டமும் அடையாமல், “இங்கு எலிகள் அதிகமுள்ளன, அதனை விரட்ட அதிக முயற்சிகள் எடுத்துவருகிறோம், ஆனாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த எலிகள் நோயாளிகளை கடிக்கும் என எதிர்பார்க்கவில்லை” என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய பதிலால் நோயாளிகளின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர். பின்னர் மருத்தவமனை உயரதிகாரிகளுக்கு இதுகுறித்து புகார் அளித்தனர். அதிகாரி புகாரை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், மருத்துவமனை சுகாதாரமின்றி இயங்குவதால் இதுபோல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, அதனை சரிசெய்ய மாநில சுகாதாரத்துறை தலையிடவேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.