துபாயில் லாட்டரி குலுக்கலில் தென் இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 28 கோடி ரூபாய் கிடைத்ததுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தின் ஜக்ரான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்காலா. இவர் துபாயில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். வேறு பணி தேடியும் கிடைக்காததால் 1 மாதத்திற்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.
ஊர் திரும்புவதற்கு முன்னதாக துபாயில் ரஃப்லே லாட்டரி சீட்டும், ஷாப்பிங் லாட்டரி டிக்கெட்டும் வாங்கியுள்ளார் விலாஸ் ரிக்காலா. லாட்டரி சீட்டு வாங்குவதற்கு கூட காசில்லாமல் தனது மனைவியிடம் கடனாக பெற்றுள்ளார் விலாஸ்.
இந்த நிலையில், விலாஸ் ரிக்காலா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 4.08 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய்.
துபாயில் இருந்து ஊர் திரும்பியதும் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த விலாஸ் ரிக்காலாவுக்கு குறைவான வருவாயே பெற்று வந்த நிலையில் லாட்டரி டிக்கெட் மூலம் கிடைத்த பரிசால் தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
இது தொடர்பாக கல்ஃப் இணையதள செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த விலாஸ் ரிக்காலா, நான் கோடீஸ்வரராவதற்கு எனது மனைவி பத்மாவே காரணம். துபாயில் இருந்து ஊருக்கு வருவதற்கு கூட என்னிட பணம் இல்லை.
இருப்பினும் லாட்டரி வாங்குவதில் ஆர்வமிருந்ததால் மனைவியிடம் இருந்த சேமிப்பில் இருந்து 20 ஆயிரம் கேட்டுப் பெற்று லாட்டரி டிக்கெட் வாங்கினேன் என தெரிவித்துள்ளார்.