தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமி 2006-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆங்கில கவிதை புத்தகத்தின் பெயர் TOUCH. சமூகத்தில் நிலவும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளைப் பேசும் அவரின் இந்த முதல் புத்தகத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. ஆறு மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக சேர்க்கப்பட்டது.
தற்போது அதனை நீக்க டெல்லி பல்கலைக்கழக பாடக்குழு பரிந்துரை வழங்கியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மீனா கந்தசாமி மட்டுமல்லாமல் வங்க மொழி எழுத்தாளர் அமிதவா கோஷ் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களையும், டெல்லி சுல்தான் வரலாறு, சில அரசியல் பாடங்கள் ஆகியவற்றையும் நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பாடப் பகுதிகள் சர்ச்சைக்குறியவை என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று அந்த பரிந்துரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ஆலோசித்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள், இந்த பாடங்களை நீக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். எண்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை துணைவேந்தரிடம் வழங்கியுள்ளனர்.
மேலும், டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ், அகில் பாரதிய வித்யார்த் பரிஷத் அமைப்புகளின் ஆதரவுள்ள தேசிய ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பால் அரசியல் ரீதியாக மாற்றியமைத்து, மதவாத கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நினைப்பதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.