ஜம்மு காஷ்மீரில் எப்போதும் இல்லாத அளவுக்கு பல்லாயிரக் கணக்கான துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் காஷ்மீரில் உள்ள மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்தது. ஆனால், அமர்நாத் யாத்திரைக்கு வரும் மக்கள் மீது தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து யாத்திரையை ரத்து செய்தது மத்திய அரசு.
மேலும், காஷ்மீரில் உள்ள வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை, உடனடியாக வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் வன்முறை நிகழக்கூடும் என அச்சமுற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரித்து வருகின்றனர் காஷ்மீர் மக்கள்.
இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை வலுத்து வரும் சமயத்தில் மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஜம்முவை தனி மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.
மேலும், வருகிற ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, இது குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க தீவிரவாத அச்சுறுத்தலால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் தாண்டி, வெளி மாநிலத்தவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்குவதை தடுக்கும் அரசியல் சாசன சட்டம் 35A மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சாசன சட்டம் 370 ஆகியவற்றை நீக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அம்மாநில அரசியல் கட்சிகளும், மக்களும் இந்த திட்டத்துக்கு நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை இந்த சட்டவிதி நீக்கப்படும் பட்சத்தில், வன்முறை வெடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.