மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவு டெலிவரி செய்யும் நபர் ஒரு இஸ்லாமியர் என்பதால், வேறு யாராவது ஒருவரை டெலிவரி செய்ய அனுப்புமாறு சோமேட்டோவிடம் கேட்டுள்ளார். ஆனால், சோமேட்டோ நிறுவனம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்திய அமித் சுக்லா '' நான் ஆர்டர் செய்திருந்த உணவை, இந்து அல்லாத ஒருவரிடம் சோமேட்டோ நிறுவனம் கொடுத்தனுப்பியது. அவர்கள், உணவு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என்றனர். பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்றும் கூறினார்கள். உணவு பெற்றுக் கொள்ள வேண்டும் என்னை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு, உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்." என்று பதிவிட்டார்.
இதற்கு சோமேட்டோ ''உணவிற்கு மதம் கிடையாது. உணவே ஒரு மதம் தான்'' என பதிலடி தந்தது. சோமேட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையதள வாசிகளால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நியூஸ் 24 என்ற இந்தி செய்தி தொலைக்காட்சியில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் ''ஹம் ஹிந்து'' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதம் கலந்துகொண்டார். விவாதத்தின் நடுவே 'காலித்' என்கிற இஸ்லாமிய தொகுப்பாளர் தோன்றி அந்த பகுதியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். காலித்தை கண்ட அஜய் கௌதம், "இஸ்லாமிய தொகுப்பாளரை நான் பார்க்கமாட்டேன்" எனக் கூறி தன் கண்களை மூடிக்கொண்டார். அஜய் கௌதமின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அஜய் கௌதமின் செயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளா நியூஸ் 24 தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அனுராதா பிரசாத், "நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தியறையில் அஜய் கௌதம் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். பத்திரிக்கை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளிக்க முடியாது. இனிமேல் அஜய் கௌதமை எங்கள் தொலைக்காட்சிக்கு அழைப்பதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் இருந்து மதவாத பிரசாரங்களும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைகளும் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் விஷம பிரசாரங்களின் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு சோமேட்டோ விவகாரம் ஒரு சாட்சி.