கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் தந்தையும், சாட்சி ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் புகார் அளித்த பெண், நேற்று முன்தினம் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ரேபரேலி நோக்கி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். புகார் கூறிய பெண்ணுக்கும், அவரது வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சுய நினைவிழந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், தினந்தோறும் வழக்கை விசாரித்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையும் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் உரிமைக் குழு உறுப்பினர்களிடம் பேசிய அப்பெண்ணின் தாயார், வழக்கைத் திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துவதற்காக வந்தபோது குண்டர்கள் தனது இளைய மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறினார்.
மேலும், எம்.எல்.ஏ-வின் ஆட்கள் தனது கணவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், தனது மாமியாரும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். தங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இழப்பீடும் கிடைக்கவில்லை என்று தன் குடும்பத்துக்கு நடந்த கொடூரத்தை அவர் தெரிவித்தார்.
இதனிடையே இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞருக்கும் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், உன்னாவ் சிறுமியின் மாமாவை, பாதுகாப்பு கருதி உ.பி. சிறையிலிருந்து டெல்லி திகார் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, புகைப்படத்தையோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என தடைவிதித்துள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாக இருப்பதால் டெல்லி மருத்துவமனையிலிருந்து மாற்றத் தேவையில்லை என்று கூறி வழக்கு விசாரணையைத் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுவிட்டதாக உ.பி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.