கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் தந்தையும் அவருக்கு நெருக்கமானவர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், பாலியல் புகாரளித்த பெண் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் அப்பெண்ணின் உறவினர் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். புகார் கூறிய பெண்ணுக்கும், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், தினந்தோறும் வழக்கை விசாரித்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிபதியை உச்சநீதிமன்றமே நியமிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்களுக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு வழங்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் உதவித் தொகை வழங்கவும் உத்தரபிரதேச அரசுக்கு விட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞரை தற்போது டெல்லி மருத்துவமனைக்கு மாற்றத் தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால் இன்று மாற்ற உத்தரவிடவில்லை. உறவினர்கள் விரும்பினால் நாளை அதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை, மீண்டும் கட்சியிலிருந்து நீக்கி பா.ஜ.க தலைமை உத்தரவிட்டுள்ளது.