புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய், ‘ஸ்டேஜ்-4’ எனும் அபாய கட்டத்தை எட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ந்தனர்.
பரிசோதனையில், அந்தப் பெண்ணின் வீட்டில் யாருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதிகமாக மாசு மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த காற்றை சுவாசித்தது தான் புற்றுநோய்க்குக் காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மார்பக அறுவை சிகிச்சை மருத்துவர் அரவிந்த் குமார் கூறுகையில் “28 வயதே ஆன பெண்ணுக்கு ‘ஸ்டேஜ் 4’ நிலையில் புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். டெல்லியில் நிலவும் அதிக மாசு நிறைந்த சூழலும் நச்சுக்காற்றுமே இதற்குக் காரணம் எனவும் கண்டறிந்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுபோன்று இளவயதில் புற்றுநோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற தற்போது பலர் வருகிறார்கள். தற்போது பரிசோதித்து புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பெண்ணின் வயது 28 தான். 30 வயதிற்குள் புகைப்பழக்கம் இல்லாத ஒருவர் புற்றுநோயுடன் வருவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார் மருத்துவர் அரவிந்த் குமார்.
டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக புற்றுநோயால் 30 வயதுக்கும் குறைவான பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லிவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.