நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மக்களுக்கு எதிரான திட்டங்களை, மசோதாக்களை மத்திய பா.ஜ.க அரசு தன்னுடைய பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இதற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.
அவசர கதியில் மசோதாக்களை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல், அவை முழுக்க முழுக்க தனியாருக்கு சாதகமாகவும் எளிய மக்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது என நாள்தோறும் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான டெரிக் ஓ பிரைன் தனது ட்விட்டர் பக்கத்தில், " மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு கொண்ட செல்லப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்கிறார்களா அல்லது பீட்சா டெலிவரி செய்கிறார்களா?" என அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றுவதை சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த கால ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டது பற்றிய புள்ளி விவரத்தையும் இணைத்துள்ளார்.
அதில், 2004-09ம் ஆண்டில் 60%, 2009-14ம் ஆண்டில் 71% நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதாக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் ஆட்சியின் போது 2014-19ம் ஆண்டில் 26 சதவிகிதமும், நடப்பு ஆண்டில் வெறும் 5 சதவிகிதமும் மட்டுமே நிலைக்குழுவுக்கு மசோதாக்கள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.