கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின், அரசு சார்ந்த ஒவ்வொரு முடிவுகளும், திட்டங்களும் மாநிலங்கள் தாண்டி பாராட்டுகளை பெற்று வருகின்றன. அந்த வகையில் 3 மாத காலத்திற்குள் கிடப்பில் உள்ள அலுவல் வேலைகளையும், மக்கள் நலப்பணிகளையும் முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
கேரள அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 29) அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் பினராயி விஜயன், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அதில், "ஒவ்வொரு அரசு அதிகாரியும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் துரிதமாக செயல்பட வேண்டும். கோப்புகளை சரிபார்க்காமல் தாமதமாக்கினால் மாநில வளர்ச்சியோடு மக்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் சமூக அக்கறையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின் போது செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது, முக்கிய முடிவுகள் குறித்து துரிதமாகவும், விவேகமாகவும் செயல்பட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பழக்கப்பட வேண்டும். அரசு திட்டங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தால் அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
விவசாயம் மற்றும் தொழில் துறை திட்டங்கள் குறித்த கோப்புகளை சரிபார்க்காமல் கிடப்பில் போட்டு காலம் தாழ்த்துவதால் மாநில வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் உள்ள கோப்புகள் அனைத்தின் மீதும் 3 மாதங்களுக்குள் சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவும் பிறப்பித்துள்ளார்.