ஆன்லைன் பயிற்சி மூலம் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பைஜூ ரவீந்திரன்.
கணக்குப் பாடம், எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஒருவிதமான ‘கிலி’யை கொடுக்கவல்லது. ஆனால், ரவீந்திரனோ அதனை அசால்ட்டாக சொல்லிக் கொடுத்து கோடீஸ்வரராகி உள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைஜூ ரவீந்திரன், ஒரு பொறியியல் பட்டதாரி. பள்ளி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய பைஜூ ரவீந்திரன், மாணவர்களுக்கு கல்வியை சுலபமாக கற்றுத்தர, ‘சாட்டை’ சமுத்திரகனி பாணியில் செயல்படத் தொடங்கியுள்ளார்.
Think And Learn என்ற ஆன்லைன் நிறுவனம் மூலம் எளிய முறையில் கல்வியை கற்பிக்கத் தொடங்கிய பைஜூ ரவீந்திரன், Byju's என்ற செயலியையும் உருவாக்கினார்.
குழந்தைகளுக்கு புரியும்படியும், அவர்கள் விரும்பும்படியும் கணக்கு பாடங்களில் உள்ள ஃபார்முலாக்களை ராப் பாடல்களாக வடிவமைத்தும், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அதனை பாடும் வகையிலும் உருவாக்கியுளார் பைஜூ ரவீந்திரன்.
இதனால் வகுப்பறைகளில் பாடங்களை கவனிக்க முடியாமல் சோர்ந்து தூங்கும் சிறுவர்கள், கவனத்தைச் சிதறவிடாமல் கற்றுக்கொள்வர் என்ற நம்பிக்கையை பைஜூ பெற்றிருந்தார். அது நடைமுறையிலும் சாத்தியமாகியுள்ளது.
2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட பைஜூவின் திங் அண்ட் லேர்ன் நிறுவனம், வெகுவாக அனைவரையும் கவர்ந்ததால் வருவாய் குவிக்கத் தொடங்கியது. இதன் மூலம் கல்வி கற்பதற்கு ஆண்டு ஒன்றுக்கு 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படுகிறது. இதுவரை Byju's-ன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.5 கோடி.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய அளவில் உள்ள கோடீஸ்வரர்களில் பைஜூ ரவீந்திரனும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. வெறும் எட்டே ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை பெற்று 150 மில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டியுள்ளது பைஜூ ரவீந்திரனின் நிறுவனம். 2020ம் ஆண்டுக்குள் ஆன்லைன் மூலம் கல்வி கற்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
பைஜூ செயலியின் அசுர வளர்ச்சிக்கு இன்னுமொரு உதாரணம், இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உருவெடுத்துள்ளது தான். இந்த நிறுவனம் வருகிற செப்.,22ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை ஸ்பான்சராக செயல்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம், 2020 முதல் பைஜூ ஆப் அமெரிக்காவிலும் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், டிஸ்னியின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’கின் சிம்பா கேரக்டரிலும், ஃப்ரோசனில் வரும் அன்னா கேரக்டரிலும் பாடங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆசிய நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூ ரவீந்திரனின் திங்க் அண்ட் லேர்ன் நிறுவனத்துக்கு கடந்த 2016ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் அறக்கட்டளையில் இருந்து 332 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.