கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு உதவ பலரும் முன்வந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை இந்திய விமானப்படை களத்தில் இறங்கி மீட்டது. தற்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டததற்காக 113.36 கோடி ரூபாயை கேரள அரசிடம் இந்திய விமானப்படை கேட்டுள்ளது. இது கேரள அரசிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்திய விமானப்படை கேட்கும் தொகையை தள்ளுபடி செய்யக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், "கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 31 ஆயிரம் கோடி தேவைப்படும் என ஐ.நா., சபையில், பேரழிவு மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. கேரளாவின் வெள்ளப் பாதிப்பினை சரி செய்ய தேசிய பேரிடர் நிவாரண நிதி 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஒக்கி புயலாலும், அதனையடுத்து 2018ம் ஆண்டு வெள்ளத்தாலும் கேரளா பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளது. அதனை மறுசீரமைக்கத் தேவையாக நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக அரசு செய்யும் செலவினால் பெரும் நிதிச் சுமையை சந்திந்தித்து வருகிறோம். மறு சீரமைப்புக்கு நிதி தேவைப்படும் இந்தச் சூழலில் மீட்பு பணிகளுக்காக விமானப்படை 113.36 கோடி ரூபாய் கேட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்யவேண்டும்". என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விமானப்படை 113.36 கோடி ரூபாய் கேட்டதற்கு கேரள மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மேலும் மோடி அரசாங்கம் முறையாக வழங்கவேண்டிய நிதியுதவியை வழங்கட்டும், பிறகு விமானப்படை சம்பளத்தைக் கேட்கட்டும் எனவும், முன்னதாக கேரள வெள்ளத்தில் தங்களின் படகுகள் மூலம் மக்களை பாதுகாத்த மீனவர்கள் கூட அவர்களுக்கு அரசு வழங்குவதாக கூறிய பணத்தை வேண்டாம் என்று மறுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அக்கறை இந்திய விமானப்படைக்கு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது எனவும், கேரள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.