நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
ஆனால் பா.ஜ.க-வினர் வழக்கம்போல கருத்து சொல்பவர்கள்மீது மோசமாக எதிர்வினையாற்றும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். மேலும் வெளிப்படையாகவே மிரட்டும் தொனியில் பா.ஜ.க-வின் சில முக்கிய தலைவர்கள் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா பா.ஜ.க மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணனைத் தாக்கியும் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இந்தியா மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் ஒலிக்கும்.
அதனைக் கேட்க விருப்பம் இல்லாதவர்கள் தங்களது பெயரை ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்து நிலவு அல்லது வேறு எதாவது கிரகத்திற்கு சென்றுவிடுங்கள். இந்திய மக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடவே வாக்களித்துள்ளனர். ஒருவேளை தேவைப்பட்டால் அடூர் கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பும் இந்த கோஷம் ஒலிக்கும்." என மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரின் கருத்து வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. எனவே அவர் மீது வழக்கு தொடரவேண்டும், கைது செய்யவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.