நாடு முழுவதும் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் அவர்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற முறை அமலில் உள்ளது. அதன்படி குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் அபராதம் வசூலிக்கும் நடைமுறையும் இருந்து வருகிறது.
இந்த அபராதம் வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என பல வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தும், அதனை ரத்து செய்ய பா.ஜ.க எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. இதனை சாதமாகப் பயன்படுத்தி வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தினர். தனியார் வங்கிகள் மட்டும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதில்லை; பொதுத் துறை வங்கிகளும் வசூல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர். வங்கிகளின் இத்தகைய அபராத விதிப்பு முறையை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், 2016 - 2017ம் ஆண்டு முதல் 2018 - 2019ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளும் 4 தனியார் துறை வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த தொகை குறித்த விவரங்களை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாக்கூர் ஜூலை 23ம் தேதி மக்களவையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016 - 2017ம் ஆண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களிடமிருந்து பொதுத்துறை வங்கிகள் ரூ.1,115.44 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.790 கோடியே 22 லட்சமும் அபராதமாக வசூலித்துள்ளனர். அதனையடுத்து 2017 - 2018ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ. 1,138 கோடியே 42 லட்சமும், தனியார் வங்கிகள் ரூ. 3,368 கோடியே 42 லட்சமும் அபராதம் வசூலித்தன.
தற்போது, 2018-19ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ. 1,312 கோடியே 98 லட்சமும், தனியார் வங்கிகள் ரூ. 1,996 கோடியே 46 லட்சமும் வசூலித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த வங்கிகள் 9,721 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமாக வசூலித்துள்ளன.
இந்தச் செய்தி மாதக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கூட பராமரிக்க முடியாத ஏழை உழைப்பாளி மக்களிடம் இருந்து ரூ. 9,721 கோடியை அபராதம் என்ற பெயரில் வங்கிகள் சூறையாடியுள்ளன.
மாதம் முழுவதும் கடினமாக உழைத்து தங்கள் தேவைக்காகச் சம்பாதித்த பணத்தை, எடுத்ததற்கு அபராதம் என்றால், ஏழை, நடுத்தர மக்கள் மீது வங்கிகள் தொடுக்கும் மிகப்பெரிய வன்முறை இதுதான் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.