உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் சோன்பத்ராவில் நடந்த நிலத்தகராறில் சுட்டுக்கொல்லப்பட்ட கிராம மக்களின் உறவினர்களை சந்திக்கவிடாமல் போலீசார் தடுத்ததால் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் போலீசார் ஒருவர் இளம்பெண்ணை மிரட்டும் தொனியில் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
அதில், கான்பூரில் உள்ள 16 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது அங்கிருந்த தலைமை காவலர் தார் பாபு என்பவர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தையில் வசைபாடியுள்ளார். இதனை அப்பெண்ணுடன் வந்த அவரது சகோதரர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
பல்வேறு தரப்பினர் தலைமை காவலர் தார் பாபுவின் தரக்குறைவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்ட பிரியங்கா காந்தி, பாலியல் துன்புறுத்தலுக்காக புகாரளிக்க வந்த இளம்பெண்ணிடம் இவ்வாறு தவறாக பேசிய தலைமைக் காவலருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லை என பா.ஜ.க அரசு கணக்கு காட்டி வரும் நிலையில், புகார் அளிக்க வந்த பெண்ணிடம் நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீசாரே இப்படி பேசியிருப்பது மிகவும் வருந்தத்தக்க, கண்டனத்திற்குரிய செயல் என குறிப்பிட்ட அவர், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த முதலில் அவருடைய பிரச்னை என்ன என்பதை முதலில் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.