2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ.131 கோடி அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரூ.30 கோடி அளவு புதிய 2000 நோட்டுகள் ஆகும்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சேகர் ரெட்டி. அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தார். சிறைக்கு சென்றதால், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
3 ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் அவர் சட்டபூர்வமான சம்பாதித்ததாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில நாட்களில் சேகர் ரெட்டியின் வீட்டில் எப்படி 30 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது என்பதற்கான விளக்கம் சி.பி.ஐ தரப்பில் கூறப்படவில்லை.
இந்நிலையில், சேகர் ரெட்டி மீண்டும் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்பதவி சேகர் ரெட்டிக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள தலைவரை, சேகர் ரெட்டி நேரில் சந்தித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் சேகர் ரெட்டிக்கு பழக்கமுள்ளதால் அவருக்கு அந்த பதவி அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்றே கருதப்படுகிறது.