3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர், சமீபத்தில் தன்னை சந்தித்த பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னை குறித்து சமரசம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார் என தெரிவித்தார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து இது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராஜ்யசபாவில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ட்ரம்ப்பிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என கூறினார்.
இந்த நிலையில், ட்ரம்ப் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சமரசம் செய்ய மோடி வலியுறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது உண்மையெனில், 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி பிரதமர் மோடி நாட்டின் விருப்பத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பலவீனமான மறுப்பு இந்த விவகாரத்திற்கு எந்தப் பயனும் அளிக்கப்போவதில்லை. மோடிக்கும், ட்ரம்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மோடி கண்டிப்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறையிடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மன் மன்னிப்பு கோரியுள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையை தீர்ப்பதற்காக அமெரிக்க உதவத் தயார் எனவும் தனது நிலைப்பாட்டை அமெரிக்க அரசு மாற்றிக் கொண்டுள்ளது.