இந்தியா

விடுதி குளியலறையில் மயங்கிக் கிடந்த பிஎச்.டி மாணவி : தொடர் உயிரிழப்புகளால் மாணவர்கள் அச்சம்! 

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் விடுதியில் உள்ள குளியலறையில் ஆய்வு மாணவி ஒருவர் மயங்கிக் கிடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

விடுதி குளியலறையில் மயங்கிக் கிடந்த பிஎச்.டி மாணவி : தொடர் உயிரிழப்புகளால் மாணவர்கள் அச்சம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் விடுதியில் உள்ள குளியலறையில் ஆய்வு மாணவி ஒருவர் மயக்க நிலையில் கிடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் காரக்பூரைச் சேர்ந்த தீபிகா மஹாபத்ரா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்தியில் பிஎச்.டி படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் வசித்து வந்த தீபிகா, நேற்று (ஜூலை 22) காலை 8 மணியளவில், குளியலறையில் மயக்க நிலையில் கிடந்ததை மற்ற மாணவிகள் பார்த்துள்ளனர்.

பின்னர் இதை பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காலை 8.30 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீபிகா உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுவதாக காவல் ஆய்வாளர் ஆர்.சீனிவாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கிடைத்த பதிவுகளின்படி, தீபிகா நரம்பியல் பிரச்னையாலும் வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 174வது பிரிவின் கீழ் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விடுதி குளியலறையில் மயங்கிக் கிடந்த பிஎச்.டி மாணவி : தொடர் உயிரிழப்புகளால் மாணவர்கள் அச்சம்! 

கடந்த ஆண்டு நவம்பரில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒடிசாவைச் சேர்ந்த மற்றொரு பிஎச்.டி அறிஞர் டெங்கு காய்ச்சலால் இறந்தார். ஒடிசாவைச் சேர்ந்த ராஷ்மி ரஞ்சன் சுனா, காய்ச்சல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் ஹிமாகிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.

பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அலட்சியப்போக்கே மரணத்திற்குக் காரணம் என அப்போதே மாணவர்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விடுதி குளியலறையிலேயே மற்றொரு மாணவி மயக்கமடைந்து உயிரிழந்திருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories