கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கர்நாடக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த வியாழக்கிழமை முதல் விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொறடா உத்தரவுக்குப் பின்னும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனக் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 13 எம்.எல்.ஏ.க்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தாங்கள் சபாநாயகர் முன் ஆஜராவதற்கு 4 வார அவகாசம் கோரியுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் குமாரசாமி அரசு கவிழும் அபாயம் இருப்பதால் முடிந்தவரை வாக்கெடுப்பை தள்ளிப்போட காங்கிரஸ் - ம.ஜ.த கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். பா.ஜ.க-வினரோ, நம்பிக்கை வாக்கெடுப்பை விரைந்து நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் - பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கொந்தளிப்பான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் நகர் முழுவதும் வரும் 25ம் தேதி வரை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 பேருக்கும் மேலாக கும்பலாக நின்று பேசுவதோ, கூட்டமாக செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மதுபானக் கடைகள், பார்கள் என அனைத்தும் அடுத்த 2 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரு நகர்ப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.