இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 : முதல்கட்டம் வெற்றி!

சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 : முதல்கட்டம் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் ஏவியது.

சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த வாரமே விண்ணில் ஏவத் திட்டமிட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் திட்டம் தள்ளிப்போனது. ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில், கனிம வளங்கள் மற்றும் மக்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள,சந்திரயான்-2 என்ற விண்கலத்தை, இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 எம்-1 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 : முதல்கட்டம் வெற்றி!

இதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று மாலை 6:43 மணிக்கு துவங்கியது. இன்று பிற்பகல், சரியாக 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. சந்திரயான் 2 திட்டமிடப்பட்டபடி புவி வட்டப் பாதையைச் சென்றடைந்தது.

சந்திரயான்-2 விண்கலம், 48 நாட்களில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும். நிலவின் தென் துருவத்தில்,சந்திரயான் -2 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக அதிக தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம்பெறும். ஆனால் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திடாத தெற்குப் பகுதியில் இறங்கப்போகும் முதல் விண்கலம் சந்திராயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories