கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற அலுவல்களில் கலந்துகொள்வதை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்த உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
15 எம்.எல்.ஏ-க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை எனக் கோரியுள்ள காங்கிரஸ், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா முதலமைச்சரும் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவு கொறடா உத்தரவு பிறப்பிப்பதை தடை செய்கிறதா என்று விளக்கம் கேட்டு மனுக்களை தனித் தனியாக தாக்கல் செய்துள்ளனர்.