உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் இந்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், அசாமி உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது பாராட்டுக்குரிய செயலாக இருந்தாலும் பழமைவாய்ந்த மொழிகளில் ஒன்றான, செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தென்னிய மாநில மொழிகளான கன்னடமும், தெலுங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியீடு பட்டியலில் இடம்பெற்றிருந்தும் தமிழ் மொழி இடம்பெறாததால், தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கொந்தளித்தனர்.
இதனையடுத்து தி.மு.க சார்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் எனும் கோரிக்கையை ன வலுவாக முன்வைத்தார். அதேபோல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்திருந்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், 100 முக்கிய வழக்குகள் குறித்த தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட கோப்புகளை வெளியிட்டார்.
வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு செம்மொழியான தமிழ் மொழியில் வெளிவந்திருக்கிறது. அதில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தொடர்பான தீர்ப்பும், வாரிசுரிமை வழக்குத் தொடர்பான தீர்ப்பும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.