நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்காக 20 மணிநேர கவுன்ட் டவுன் கடந்த ஜூலை 14ம் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
‘இஸ்ரோவின் பாகுபலி’ என அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 15ம் தேதி காலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், ராக்கெட்டை விண்ணில் செலுத்த சுமார் 56 நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென விண்கலம் ஏவும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தற்காலிகமாக சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறுத்திவைத்தனர்.
இந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலம் வருகிற ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.