திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரின் மகன்கள் மணித்துரை மற்றும் மணிகண்டன். இருவரையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி ரூபாய் 2.70 லட்சம் பணத்தைப் பணத்தை வாங்கிய அவிநாசியைச் சேர்ந்த தரகர் ரஞ்சித் என்பவர், தாய்லாந்து பனியன் கம்பெனிக்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்துள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் தாய்லாந்தில் தவித்திருக்கிறார்கள் மணித்துரையும், மணிகண்டனும். அங்கு பனியன் கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை. அங்கு சம்பளம் வழங்கப்படாமல் ஹோட்டலில் வேலை செய்துள்ளனர். கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளரை தொடர்புகொண்டு 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து மணிகண்டனக் மீட்டு திருப்பூருக்கு வரவழைத்துள்ளார் மாரியம்மாள்.
இதையடுத்து, மூத்த மகன் மணித்துரையை மீட்க திருப்பூர் போலீசாரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மகனை மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் மாரியம்மாள்.
இது குறித்த செய்தியை இணையம் மூலம் தெரிந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “மணித்துரை தாய்லாந்தில் இருந்து தாயகம் திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும், இந்தியத் தூதரகம் அளித்து வருகிறது. திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது” என ட்வீட் செய்தார். இதைப் பலரும் பாராட்டினர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த அவரோ, தமிழரான மணித்துரைஅயை மீட்டுக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் ட்விஸ்ட்.
ஆனால், அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டது போல் மணித்துரைக்கு அப்படி எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லையாம். இதனால், கந்துவட்டிக்கு 4 லட்ச ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து தன் மகன் மணித்துரையை தாய்லாந்திலிருந்து மீட்டு வந்திருக்கிறார் மாரியம்மாள். நடவடிக்கை எடுப்பதாக ட்வீட் செய்துவிட்டு அதுபற்றிக் கண்டுகொள்ளாத அமைச்சர் ஜெய்சங்கர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய மாரியம்மாள் “அமைச்சர் சொன்னதும் நடக்கல... எங்களை ஏமாத்துன தரகர் ரஞ்சித் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கல” என ஆதங்கத்தோடு குறிப்பிட்டுள்ளார்.