நிலோட்பால் சக்ரபர்த்தி எனும் 38 வயதான கெமிக்கல் இன்ஜினியர், கொல்கத்தாவின் ஹவுராவில் உள்ள தனது அலுவலகத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதை அடுத்து, விரல் நுனி துண்டிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் பணியாளர்கள், கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்து சிகிச்சையில் அலட்சியம் காட்டியுள்ளனர். இதையடுத்து, அவரது விரல் நுனியை பொருத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதனால், நிலோட்பாலின் மனைவி மருத்துவமனை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஹவுரா மாவட்டத்தின் சங்க்ரெயிலில் வசிக்கும் நிலோட்பால் சக்ரவர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. நிலோட்பாலின் பைக் சறுக்கியதில், அவர் சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் இடது கை மோட்டார் சைக்கிளின் கீழ் சிக்கி, மோதிர விரலின் நுனி துண்டிக்கப்பட்டது.
துண்டிக்கப்பட்ட விரல் நுனியை எடுத்து, சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைத்து, அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை பணியாளர்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர்.
பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட விரல் பகுதி அவசர சிகிச்சைப் பிரிவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியளவில் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார் நிலோட்பால். மருத்துவர்கள் காத்திருந்தபோது, துண்டிக்கப்பட்ட விரல் பகுதி மாயமாகியுள்ளது. மதியம் 12.30 மணியளவில், விரல் பகுதி காணாமல் போனதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை பணியாளர்களின் அலட்சியமே தனது கணவரின் விரல் பகுதியைப் பொருத்த முடியாமல் போனதற்குக் காரணம் என நிலோட்பாலின் மனைவி சயனிகா குற்றம்சாட்டியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் ஊழியர்கள் மும்முரமாக இருந்ததாகவும், அதனால் துண்டிக்கப்பட்ட விரல் நுனியைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் நிலோட்பாலின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, துண்டிக்கப்பட்ட பகுதி பயனற்றது அதை இணைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். “துண்டிக்கப்பட்ட விரலில் ஏராளமான இரத்த நாளங்கள் மற்றும் தசைநாண்கள் வெளியே இழுக்கப்பட்டிருந்தது. எனவே, பொருத்துவதற்கான வாய்ப்பு 10% மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம் என நினைத்தோம்.” என பிளாஸ்டிக் சர்ஜன் தெரிவித்துள்ளார்.
விரல் காணாமல் போனது குறித்த புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு சி.சி.டி.வி காட்சிகளைத் தருமாறு அலிப்பூர் போலீசார் மருத்துவமனையை கேட்டுள்ளனர். அலட்சியமாக இருந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிலோட்பாலின் உறவினர்கள் கோரியுள்ளனர்.