மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ராஷ்டிரகந்த் துகோடோஜி மஹாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின், பி.ஏ - வரலாறு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேச வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பங்கு என்ற தலைப்பில் கல்லூரிப் பாடம் இடம்பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகம் நாக்பூரில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கலை வரலாறு படிப்பின் நான்காவது செமஸ்டரில் இடம்பெறும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்தில் மூன்றாவது பிரிவின் முதல் அத்தியாயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கைப் பற்றி பேசுகிறது. பழைய பாடத்திட்டத்தில், மூன்றாவது பிரிவின் முதல் அத்தியாயம் 'வகுப்புவாதத்தின் எழுச்சி மற்றும் வளர்ச்சி' பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் சேர்க்கப்பட்டது குறித்துப் பேசிய பல்கலைக்கழக டீன் பிரமோத் சர்மா, “பாடத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் நான் கொண்டுவரவில்லை. எனது பதவிக்காலத்தின் கடைசி 8 மாதங்களில் இது செய்யப்படவில்லை. முந்தைய டீன் பதவிக்காலத்தில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். அது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது” என்றும் அலட்சியமாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்தும், அரசியலமைப்பு மற்றும் தேசியக்கொடியை எதிர்த்தும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய போராட்டத்தையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.