நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியை ஆஜராக உத்தரவிட்ட வழக்கை பட்டியலிடுவதில் உச்சநீதிமன்ற ஊழியர்கள் இருவர் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர்களை பணிநீக்கம் செய்தது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளை பட்டியலிடுவதில் கடும் சிக்கல்களும், முறைகேடுகளும் இருப்பது நீடிப்பதால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேரடியாக தலையிட்டு சிபிஐ-யில் பணியாற்றும் சீனியர் கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக இருப்பவர்களை உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதிவாளர், இணை பதிவாளர், கிளை அதிகாரிகளாக பணியமர்த்தியுள்ளார்.
இவ்வாறு பணியமர்த்தப்படும் அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தும், ஊழியர்கள் மீது எழுப்பப்படும் புகார்களை விசாரிக்கவும் உள்ளனர்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பதிவாளர், ஊழியர்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் வழக்கறிஞர் ஒருவர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த ஊழல் முறைகேட்டை விசாரிக்க ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அதற்கு மத்திய புலனாய்வு, உள்நாட்டு உளவுப்பிரிவு, டெல்லி காவல்துறை உதவச் சொல்லி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
அனில் அம்பானிக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.