நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தாா். அதன் பிறகு தற்போது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் செய்யப்படும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்கிறாா்.
மக்களவைத் தோ்தலின் போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் பல்வேறு வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. எனவே அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஏதாவது நலத்திட்டம் சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு, தனிநபர் உச்சவரம்பை அதிகரிப்பது, விவசாயம், சுகாதாரம், சமூக நலம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இதேபோல, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 20 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சாலை, ரயில்வே போன்ற துறைகளில் உள்கட்டமைப்புத் துறை பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.