மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல், மேற்கு வங்கத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடாததற்காக மதபோதகரை ரயிலில் இருந்துஇந்துத்துவா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அந்த சம்பவம் முடிந்த 2 நாட்களில் மும்பை தானா பகுதியில் திவா என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தி அவரையும் அடித்து வன்முறையில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டது.
இந்நிலையில், ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச்சொல்லி, உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல்,குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது.
சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், வெறிக்கும்பலை விரட்டிவிட்டு, தாஜூதீனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, தாஜூதீன் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு ஆயுதமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை இந்துத்துவா மதவெறிக் கூட்டம் கையில் எடுத்துள்ளது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.