சமூக ஊடகங்களில் பரவும் பொய்ச் செய்திகள், வதந்திகள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றவேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளும், தவறான தகவல்களும் அதிகமாகப் பரப்பப்படுகின்றன. வாட்ஸ்-அப் வதந்திகளை நம்பி பலர் கொல்லப்படும் சூழலையும் நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகமாக எழத் துவங்கியுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசினார். அப்போது, “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், மக்களிடையே பிரிவினையையும் ஏற்படுத்துகின்றன.
வதந்திகள் தீவிரவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானவை என்பது உண்மையாகி இருக்கிறது. போலியான செய்திகள் கலவரம், சட்டம்-ஒழுங்கு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. பிரபலமானவர்களும் போலிச் செய்திகளை நம்பி பகிர்கின்றனர். போலிச் செய்திகளைத் தடுக்கம் முழுமையான சட்டம் கொண்டுவருவது அவசியம்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்ய நாயுடு, “பொய்ச் செய்தி குறித்த இந்த விஷயம் முக்கியமானது. கருத்துச் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் கருத்தொற்றுமை அடிப்படையில் இந்தப் பிரச்னைகக்குத் தீர்வுகாண வேண்டும்” எனத் தெரிவித்தார்.