இந்தியாவின் உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை நியமித்துள்ளது மத்திய அரசு. தற்போது, உளவுத்துறை (IB) இயக்குநராக ராஜீவ் ஜெயினும், ‘ரா’உளவு அமைப்பின் தலைவராக அனிஸ் தாஸ்மானாவும் உள்ளனர். 2016 டிசம்பரில் நியமிக்கப்பட்ட இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் இவர்களின் பணிக்காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
உளவுத்துறை இயக்குநராக அரவிந்த் குமாரும், ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே 1984-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் குமார் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையாள்வதில் முக்கியப் பங்காற்றியவர். சமந்த் கோயல் 2019 பிப்ரவரியில் நடைபெற்ற பாலகோட் விமானப்படை தாக்குதல் மற்றும் 2016-ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிலும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.