பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட 90,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. நாட்டிலேயே அதிக நஷ்டத்தை சந்தித்த முதன்மை பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், கடந்த 2018-19 வரையிலான காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கடன் 14 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு வரையில் 500 கோடி வரையிலான லாபத்தை ஈட்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனம், அதன்பிறகு தொடர் சரிவைச் சந்தித்துள்ளது. தனது 1.7 லட்சம் ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க திணறி வருகிறது.
இதனால் ஜுன் மாத ஊதியமாக கிட்டதட்ட ரூபாய் 850 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். தொலைத்தொடர்பு துறையின் இணை செயலருக்கு இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் உடனடி நிதி உதவி அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது முடியாமல் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனாலேயே அரசின் வசம் இருக்கும் முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இழப்பை சந்தித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.