பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில் மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் மூளைக்காய்ச்சல் நோயால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். உயிரிழப்பு அதிகரித்ததற்கு மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, தமண்ணா ஹாஷ்மி என்பவர் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் தங்கள் பணிகளை சரிவர செய்யாததே உயிரிழப்பு அதிகரித்ததற்குக் காரணம் என மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், ஹர்ஷ்வர்தன், மங்கள் பாண்டே ஆகியோர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக, குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.