ஆந்திர மாநிலத்துக்கு அண்மையில், மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 176 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறியது.
இதனையடுத்து ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, 5 துணை முதலமைச்சர்கள், காவல்துறையினர்களுக்கு வாரவிடுமுறை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், புகழ்பெற்ற வழிப்பாட்டு தலங்களில் ஒன்றான திருப்பதி கோவில் தேவஸ்தான தலைவராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினருமான சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சுப்பாரெட்டி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அவர் எப்படி இந்துக்களின் புனித தலமாக இருக்கும் திருப்பதி கோவில் தேவஸ்தான தலைவராக நியமிக்கமுடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ட்விட்டரில் குறிப்பிட்டு மோடியின் ஆதரவாளரும், எழுத்தாளருமான மது பூர்ணிமா என்பவர் பதிவிட்டிருந்தார்.
இது வைரலானதை அடுத்து, இந்த கேள்விக்கு விளக்கமளித்துள்ள சுப்பா ரெட்டி, தான் பிறப்பில் இந்து மதத்தைச் சேர்ந்தவந்தான் என்றும், தற்போதும் இந்து மதத்தை பின்பற்றி வருகிறேன் என்றும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவி என்பது ஆந்திர மாநிலத்தில், அமைச்சருக்கு நிகரான பதவியாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.