மோடியின் முந்தைய அரசின் கடைசி காலகட்டத்தில், சில அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றை சட்ட மசோதாக்களாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவசர சட்டத்தின் நகல்கள் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர்கள், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வீ.முரளீதரன் ஆகியோர் அவற்றை தாக்கல் செய்தனர்.
முத்தலாக் தடை அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், ஒழுங்கற்ற முதலீட்டு திட்டங்கள் அவசர சட்டம், ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு அவசர சட்டம் உள்ளிட்ட 10 அவசர சட்ட நகல்கள் சட்ட மசோதாக்களாக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
‘தலாக்’ என 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பா.ஜ.க கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. நாடாளுமன்ற மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது.
இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கலாகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தின் நகலையே மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்கிறது. நடப்பு கூட்டத்தொடரில் 45 நாட்களுக்குள் அவைகளில் சட்டமாக நிறைவேற்றப்படவேண்டும் என விதி இருப்பது குறிப்பிடத்தக்கது.