மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று, கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவர்கள் போராட்டத்திற்கு நியாயம் வேண்டும் எங்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா 3 நாட்களுக்குள் வேலைக்கு திரும்பவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார்.
மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையில் ஹெல்மெட் மற்றும் பேண்டேஜ் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து டெல்லியில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தனர்.
மேலும் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு பெங்கால் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஹைதராபாத்தில் மருத்துவர்கள் பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சப்தர்சங் மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதனால் நோயாளிகள் சிகிர்ச்சை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மீது அவ்வப்போது இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்துவருவதால் அதனைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மேலும் இந்த போராட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ” நான் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வலியுறுத்துகிறேன் என்பதனை அனைத்து மருத்துவர்களிடம் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் அடையாளப் போராட்டத்தில் மட்டும் ஈடுபடவும், அதே நேரத்தில் பணிகளையும் மேற்கொள்ளவும் வேண்டுகொள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்தார்.