உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெண் ஒருவர் விமர்சித்த விடியோ ஒன்றை டெல்லியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். முதல்வர் மீது பொய்யான தகவலைப் பரப்புவதாகக் கூறி செய்தியாளரையும், ஆதித்யனாதை விமரிசித்த பெண்ணையும் சனிக்கிழமை லக்னோ காவல்துறை கைது செய்தது. பின்னர் டெல்லி நொய்டாவில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சீல்வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விரிவாக விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தனர்.
அதன்டிப்படையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.
”கருத்துவேறுபாடு இருக்கலாம் அதற்காக கைது நடவடிக்கையா? எந்த அடிப்படையில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்தீர்கள்?” என கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ”அவர் கொலைக் குற்றம் செய்துவிட்டாரா; ஒரு அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய நீதிபதி, ”இந்திய குடிமகனின் சுகந்திரம் என்பது புனிதமானது. கருத்து சுகந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், இது அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதனை மீறக்கூடாது. பெருந்தன்மையை காட்டும் விதமாக பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்யுங்கள்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.