அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு வாயு புயல் என பெயரிடப்பட்டிருக்கிறது.
குஜராத்தை நோக்கி வாயு புயல் நகர்வதால் தமிழகத்து எந்த ஆபத்தும் ஏற்படாது. புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு நோக்கி வாயு புயல் நகர்வதால் குஜராத் மாநிலத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக உருவெடுத்து குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதிகளில் ஜூன் 13ம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், காற்றின் வேகம் 110 முதல் 120 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால், கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும். எனவே அம்மாநில மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.