மத்திய அரசு கடந்த ஜூன் 1ம் தேதியன்று புதிய கல்வி கொள்கைக்கான வரைவுகளை வெளியிட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்கு, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், மூத்த பா.ஜ.க தலைவரும், தற்போதைய மேகாலயா மாநில கவர்னருமான டதகதா ராய் ட்விட்டரில் “இந்தி மொழி கற்பதை, அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்க்கின்றனர். அசாம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பெரும்பாலான மக்கள் இந்தி மொழி பேசுவது இல்லை. ஆனால், அவர்கள் இந்தி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மேற்கு வங்க மாநிலத்தின் பெருமை தற்போது காணாமல் போய் விட்டது.
மேற்கு வங்க ஆண்கள் ஹரியானாவிலிருந்து கேரளா வரை பல்வேறு மாநிலங்களில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க பெண்கள், மும்பை போன்ற நகரங்களில் உள்ள பார்களில் நடனமாடுகின்றனர்” என்று கூறியுள்ளார். இதற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.