நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இதற்கான பதவியேற்பு விழா கடந்த மே 30 அன்று நடைபெற்றது. அதனையடுத்து, புதிய அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
பதவியேற்பு விழாவின் போது வருகைதந்த மாலத்தீவு பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் ஆகியோர் தங்களது நாட்டுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி, பதவியேற்புக்குப் பிறகு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவு செல்ல இருக்கிறார். ஜூன் 8ம் தேதி முதல் 9ம் தேதி வரை மாலத்தீவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பும்போது இலங்கைக்குச் செல்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அடுத்த நாளே மோடியின் அடுத்த ஆறுமாத கால வெளிநாட்டுச் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூன் 13-ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மோடியின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. அதற்கிடையே, மாலத்தீவு, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் மோடி.