இந்தியா

இந்தி திணிப்பு எதிர்ப்பு.. மாநில சுயாட்சி - பா.ஜ.க-வை சீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி என திராவிட இயக்கங்களின் கொள்கைகளை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு.. மாநில சுயாட்சி - பா.ஜ.க-வை சீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி என திராவிட இயக்கங்களின் கொள்கைகளை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு பலத்த வரவேற்பு உருவாகியுள்ளது.

இரண்டாவது முறையாக பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், புதிய கல்விக் கொள்கைப் பரிந்துரையில், பள்ளியில் மாணவர்கள் மூன்றாவது மொழி கற்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழங்கிய வேளையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ட்வீட் செய்தார். அதில், அவர் ‘மரியான்’ படத்துக்காக இசையமைத்த “இன்னும் கொஞ்சநேரம் இருந்தாத்தான் என்ன” எனும் பாடலை பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவர் பாடிய காட்சியைப் பகிர்ந்திருந்தார்.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும்போது, ரஹ்மான் இந்தக் காட்சியைப் பகிர்ந்திருந்தது பரவலாக கவனத்திற்குள்ளானது.

இந்நிலையில், இன்று ‘AUTONOMOUS' எனும் வார்த்தைக்கு கேம்ப்ரிட்ஜ் ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருள் இது என சூசகமாக ட்வீட் செய்திருக்கிறார். ‘சுயாட்சி’ என்பதற்குப் பொருள் “ நாடோ அல்லது குறிப்பிட்ட பகுதியோ யார் தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக நிர்வகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது” என அதில் அருஞ்சொற்பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி என்பது தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் கொள்கை முழக்கம். மாநிலங்களின் சுதந்திரத்தைக் குலைக்கும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படும் நிலையில் பல்வேறு மாநிலங்களின் சுயாட்சி முழக்கம் வலுப்பெற்று வரும் நிலையில் இதைப் பற்றி ட்வீட் செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அரசியல் கருத்துகளைத் தவிர்த்துவந்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தொடர்ச்சியாக பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories