குஜராத்தில் பெண்ணை ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த வீடியோவில் தாக்குதல் நடத்துபவர்கள் யார்? பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்த பெண் நிது தேஜ்வாணி. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். குபர் நகரில் அதிகமாக நிலவும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தியும் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் அத்தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ பல்ராம் தவானியிடம் கோரிக்கை வைத்துள்ளார் இவர். கோரிக்கைக்கு முறையாக எம்.எல்.ஏ பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் அலட்சியப்போக்கினை எதிர்த்து நிது தேஜ்வாணி கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்ராம் தவானி பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதனை அடுத்து அங்கிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பலரும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆங்கில ஊடகம் பேட்டியெடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, "நான் மற்றும் எங்கள் சகாக்கள் நகரில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து எம்.எல்.ஏ., பல்ராம் தவானியை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கச் சென்றிருந்தோம். நான் சொல்வதை பொருட்படுத்தாமல் என்னுடைய கன்னத்தில் அறைந்தார். அதனை தொடர்ந்து அவரும், சில பா.ஜ.க தொண்டர்களும் என்னை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதனை அறிந்த எனது கணவர் என்னை காப்பாற்ற ஓடிவந்தார். அருகில் இருந்த பெரிய தடியால் என் கணவரையும் கண்முடித்தனமாக தாக்கினர். என்னுடன் வந்த பெண்களின் மீதும் எம்.எல்.ஏ., பல்ராம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து எம்.எல்.ஏ., பல்ராம் தவானியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கொடூரமாக அப்பெண்ணைத் தாக்கிய அவர் வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் என அலட்சியமாகக் கூறியுள்ளார். இதைக் கேட்ட பலரும் கோபத்தின் உச்சிக்கே சென்று கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதவ் இதுகுறித்து, "பெண் ஒருவரை எம்.எல்.ஏ., தாக்கும் வீடியோ மனதை வருந்தச்செய்வதாக உள்ளது. மிகுந்த வேதனை தரும் அந்தச் சம்பவத்தைக் கண்டிக்கிறேன். பெண்களை பா.ஜ.க-விடமிருந்து காக்க வேண்டியுள்ளது. பா.ஜ.க தலைமை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.