இந்தியா

கீழே விழுந்த பழங்களை எடுத்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொலை : ஆந்திராவில் கொடூரம்!

கீழே விழுந்த பழங்களை எடுத்ததற்காக பட்டியலினத்தவர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குற்றவாளிகள் நாடகம் நடத்தியது அம்பலமானது.

கீழே விழுந்த பழங்களை எடுத்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொலை : ஆந்திராவில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் கோலாலா மமிதாடா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் மூன்று நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவரின் சொந்த ஊரில் விட்டுவிட்டு மமிதாடா பகுதிக்குத் திரும்பினார்.

இரவு முழுவதும் ஸ்ரீனிவாஸ் வீடுதிரும்பாத நிலையில் 30-ம் தேதியன்று சிங்கம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரிடம் சிங்கம்பள்ளி பகுதியின் முக்கிய பிரமுகர்கள் கூறியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த அவரது மனைவி, அவர் வேறு ஒரு ஊரில் அதுவும் அரசு அலுவலகத்தில் எப்படி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பார். அதுமட்டுமின்றி அவரது உடலில் காயங்கள் இருப்பது நன்றாக தெரிகிறது. எனவே, இது திட்டமிட்ட கொலைதான் என்று புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

கீழே விழுந்த பழங்களை எடுத்ததற்காக தலித் இளைஞர் அடித்துக் கொலை : ஆந்திராவில் கொடூரம்!

அந்த தகவலில், ஸ்ரீனிவாஸ் வீடு திரும்பும்போது சிங்கம்பள்ளி கிராமத்தில் சிறிதுநேரம் ஓய்வு எடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அருகில் இந்த மா மரத்தில் இருந்து கீழே விழுந்துகிடந்த மாம்பழங்களை எடுத்துள்ளார். அதைப் பார்த்த தோட்டக்காவலர் அவரிடம் எந்த ஊர் என விசாரித்துள்ளார். தோட்டத்தின் உரிமையாளரும் மேலும் சிலரும் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் விசாரித்ததில் அவர் பட்டியலினத்தை சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போலீசாரிடம் 10 பேர் சேர்ந்து ஸ்ரீனிவாஸை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான 8 பேரை தீவிரமாக போலீசார் தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றவாளிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீனிவாஸின் உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories