பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று காலை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த மேலதிக விவரங்களை வெளியிட்டுள்ளது குடியரசுத் தலைவர் மாளிகை.
அதில் 'ஜலசக்தி துறை' என புதிதாக அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. ஜலசக்தி துறைக்கு அமைச்சராக ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகனை எதிர்த்து ஜோத்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
நிதின் கட்கரி வசமிருந்த மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு ஆகிய துறைகளை இணைந்து ஜலசக்தி துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் துப்புரவு துறையும், இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஜலசக்தி துறைக்கு அமைச்சரவை உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.