மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இதனையடுத்து, டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடியும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் நரேந்திர மோடி. மேலும், தேசிய போர் நினைவுச் சின்னத்திலும் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசராரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.