17-வது மக்களவைக்கு இதுவரை காணாத அளவுக்கு 78 பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வரலாற்றுச் சிறப்பாக ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த பழங்குடி இன இளம்பெண் சந்திராணி முர்மு மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வறுமையில் வாடும் மக்களுக்காகவும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை சஞ்சீவுடன் இணைந்து பல்வெறு சமூக சேவைகளை செய்து வருகிறார் சந்திராணி. ஒடிசாவில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கியோஞ்சர் மக்களவை தொகுதியில் பிஜூ ஜனதா தளம் சார்பில் சந்திராணி முர்மு போட்டியிட்டார். இவருக்கு போட்டியாக பா.ஜ.க. வேட்பாளர் ஆனந்த் நாயக் களம் கண்டார்.
இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. மேலும், கியோஞ்சர் தொகுதியை கைப்பற்றுவதற்காக பா.ஜ.கவினர் சந்திராணி முர்மு குறித்து பல போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை உலாவரச் செய்தனர். ஆனால், சந்திராணியின் பிரசாரமும், சமுதாயத்தின் மீது அவருக்கு இருந்த அந்த அக்கறையும் பா.ஜ.கவின் வியூகங்களை தவிடுபொடியாக்கிவிட்டது.
கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்படி, தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார் சந்திராணி. மேலும், மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையையும் சந்திராணி பெற்றுள்ளார். அவருக்கு வயது 25.