17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. வருகிற 30ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதனையடுத்து, ஜூன் 6ல் 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், நடப்பு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 எம்.பிக்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், 542 பேரில் 539 பேரின் சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாகவும், மீதமுள்ள மூவரின் விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
புதிதாக பதவியேற்க உள்ள எம்.பிகளில் 475 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில், பா.ஜ.க எம்.பிகளின் எண்ணிக்கையே அதிகபட்சமாக உள்ளது. 265 பா.ஜ.க எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் என்றும், அதன் கூட்டணியில் உள்ள சிவசேனாவின் 18 எம்.பிக்களும் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், காங்கிரஸ் கமிட்டியின் 52 எம்.பிக்களில் 42 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், இந்த பட்டியலில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத், கன்னியாகுமரி எம்.பி வசந்த்குமார், பெங்களூரு ரூரல் எம்.பி டி.கே. சுரேஷ் என்ற வரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
தி.மு.க.,வின் 23 எம்.பிக்களில் 22 பேரும், திரிணாமுல் காங்கிரஸின் 22ல் 22 பேரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 22ல் 19 பேரும் 1 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தோராயமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரூ.20.93 கோடிக்கு சொத்து வைத்திருக்கலாம் என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மேலும், நடப்பு மக்களவையில் உள்ள 266 எம்.பி.,க்களின் சொத்துகள் தலா 5 கோடிக்கும் மேல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டில் 315 எம்.பி.,க்களும், 2014ம் ஆண்டில் 443 எம்.பி.,க்களும் கோடீஸ்வரர்களான இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.