17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும். முடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.