கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரலாறு காணாத வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இதில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் பின்னடைவைச் சந்தித்து வருகிறார் ராகுல். இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால், வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 8,38,371 வாக்குகள் அதிகமாகப் பெற்று வரலாறு கண்டிராத வெற்றியைப் பெற்றிருக்கிறார் ராகுல்.
கடந்த மக்களவைத் தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிட்ட மோடி, 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனில் பாசு 2004 மக்களவைப் பொதுத்தேர்தலில் 5,92,502 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே, பொதுத் தேர்தலில் அதிகபட்ச வெற்றி வித்தியாசமாக இருந்தது.
மக்களவை இடைத்தேர்தலில் கோபிநாத் முண்டேவின் மகள் பிரீதம் முண்டே 6,92,245 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனைகளை முறியடித்து, மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் காங். தலைவர் ராகுல் காந்தி.