17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கம் முதலே முன்னிலை நிலவரம் வெளியான தொகுதிகளில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலையில் உள்ளார்.
போபால் தொகுதியில் பிரக்யா தாகுர், திக் விஜய சிங்கைவிட முன்னிலை பெற்றுள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் முன்னிலை பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பளாராக களமிறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னடைவு சந்தித்து வருகிறார்.